கிழக்கில் சூரியன்
மலையுச்சியில் ஒரு வீடு
சூரியக்கதிர்களை தன்னிறத்தில் வடிகட்டும் திரைச்சீலை
ஒலிக்கும் அலறிமணி அமர்த்தும் என் கை
என் விழியில் விழிக்கும் அவள் அஞ்சனம் கலைந்த விழிகள்
மஞ்சம் எழும்முன் ஒரு ஆலிங்கனம்
அது போதும் எனக்கு
சோம்பல் முறிக்கும் இரு உடல்கள்
விடுமுறை தினமெனும் களிப்பு
ஒரு தொட்டியில் இரு குளியல்
அவள் கூந்தல் உலர்த்தும் குமஞ்ச நறுமணம்
போட்டியிட்டு அவளுக்கு முன் சமையலறையில் புகும் நான்
அது போதும் எனக்கு
காய்கறிகளின் தட்டுப்பாடு
இணையத்தின் உதவியில் ஒரு புது ஆகாரம்
பாராட்டுக்களுடன் சிற்றுண்டி முடிவு
அவளை மயக்கும் மற்றொரு கலையை கற்ற நிறைவு
இலவச இணைப்பாக எனக்கொரு பாராட்டு முத்தம்
அது போதும் எனக்கு
பிடித்தமான இயக்குனரின் திரைப்படம் வெளியீடு
ஓர இருக்கைகள் இருந்தும் நடு இருக்கைகள் தேர்வு செய்யும் கட்டுப்பாடு
நம்மை பிரதிபலிக்கும் காதல் காட்சிகள்
நிமிடத்துக்கொருமுறை ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளுதல்
திரைப்படக்காட்சிகள் நம்மை விஞ்சவில்லை என்னும் பரஸ்பர கௌரவம்
அது போதும் எனக்கு
உணவகத்தில் எதிரெதிர் ஆசனம்
மிதமான சூட்டில் சாதமும் கறியும்
பாரபட்சமின்றி மேய்வதற்கு அசைவ வகைகள்
ஒரே கோர்வையில் இரண்டு ஏப்பங்கள்
முடிவுரைக்கு ஒரு திகட்டாத இனிப்பு
அது போதும் எனக்கு
நகரின் பெரிய பல்பொருள் அங்காடி
விலைக்குறிப்பை பார்க்காமல் வாங்கும் பெருமிதம்
அவளுக்கே தெரியாமல் அவளே தேர்ந்தெடுத்த அவளின் பிறந்தநாள் பரிசு
இரண்டு மணிநேர மலையேற்றத்துக்கு தயாராக வாகனம்
முன்னிருக்கையில் அவளோடு கதைப்பேசிக்கொண்டே தொடங்கும் பயணம்
அது போதும் எனக்கு
வீடுதிரும்பிய பெரு மூச்சு
வாங்கிய பொருட்களை ஒவ்வொன்றாய் எடுத்துப் பார்க்கும் தருணம்
அது அவள் பரிசு என்று உணரும் நொடி
பல நிமிடங்கள் நீடித்த ஒரு ஆலிங்கனம்
ப்ரணவப்பொருள் உணர்த்தும் அவள் மூச்சின் வாசம்
பின்னணியில் ரகுமானின் மெல்லிசை
வேறென்ன வேண்டும் எனக்கு!?
– பாரதியன் சௌமியராஜன்
[கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் ‘இது போதும் எனக்கு’ கவிதையிலிருந்து ஈர்க்கப்பட்டு அதைத் தழுவி எழுதப்பட்டது]