அவள் பள்ளிப் பருவத்திலிருந்தே என் தோழிதான்.
ஒரு நீண்ட பள்ளிப்பருவ கோடை விடுமுறைக்குப் பிறகு நான் அவளை பார்க்கிறேன்.
ஆனால் என்றும் இல்லாத விதமாய் அவளின் சிணுங்கிய கண்கள் என்னை மிகவும் ஈர்த்தது.
ஓர் இளம் புரியா புதிய உணர்வுகள் எனக்குள் ஊடுருவி ஆட்டிப் படைத்தது.
மீண்டும் மீண்டும் அவளின் திருமுகத்தை பார்க்க சொல்லிய என் மனது.
அவளின் கன்னம் தொடும் கூந்தலில் நான் சற்று கரைந்து தான் போனேன் போலும்.
ஆவலோடு அவள் என்னை நோக்கினாள் சிறு புன்மறுவலுடன்.
அந்த நொடியில் ஜெட் வேகத்தில் பறந்த என் இருதய துடிப்புகளின் ஓட்டத்தை சொல்லினும் மாளாது.
என்னை நானே கேட்டுக் கொண்டேன் எனக்கு என்னதான் ஆயிற்று என்று.
அதன் பிறகு அவளிடம் சகஜமாக பேச தோன்றவில்லை இருந்தும் அவள் பேசுவதை கவனிக்கவும் மறுக்கவில்லை.
என் கண்கள் அவளை நோக்கி நிமிர்ந்து பேச தயங்கியது.
என் கால்களின் நடுக்கத்தை தவிர்க்க நான் அங்கும் இங்கும் அவளின் பேச்சுக்களை கேட்டவாறே நடக்க தொடங்கினேன்.
அன்றைய மாலைப் பொழுது போனதே தெரியவில்லை.
நாங்கள் பேசிய அந்த இரண்டு மணி நேரம் எனக்குள் ஒரு மின்னதிர்வுகளை உண்டாக்கியது. பிறகு கைத்தொலைபேசியின் சலசப்பில் இருவரும் விடை பெற்றோம்.
அந்நாளில் எனக்குள் எழுந்த ஆழ்ந்த கேள்விகளுக்கு என்னால் விடை அளிக்க முடியவில்லை.
என்னுள் ஏற்படும் இந்த உணர்வு அவளிடமும் இருக்குமோ ? என்ற தடுமாறிய சிந்தனையுடன் இரவு பொழுதை கழித்தேன் உறங்காமல் அவள் ஞாபகங்களுடன்.