அதிகாலை ஒரு ஆறு மணி இருக்கும். பகலவனின் ஒளியும் அலைபேசியில் நான் வைத்த தொலைபேசி ஒலியும் என்னை ஒரு சேர எழுப்பின. கனவலைகளில் இருந்து விடை பெற்று நிஜவலைகளை நோக்கி பயணிக்க ஆயத்தம் ஆனேன். என் நினைவுகளில் அன்று செய்ய வேண்டிய பணிகள் முன்னோட்டமிட்டன.சற்று நிமிர்ந்து நின்று பெரு மூச்சு விட்டவாறே அன்றைய தினத்தை முழுமையாக்க தயாரானேன். வழக்கம் போல அலுப்பான அலுவலக பயணம் இனிதே ஆரம்பமானது. தன்னலம் மிகுந்த மனிதர்கள், நெரிசல் மிகுந்த பேருந்து பயணங்கள், ஆளை ஏமாற்ற காத்து கிடக்கும் தொலைபேசி அழைப்புகள், முகநூலில் தெரிந்தும் தெரியாத முக நண்பர்களின் பதிவுகள், உழைக்க வழியிருந்தும் பொய் சொல்லி பிச்சை கேட்கும் குடிமகன்கள் இவர்களுக்கு இடையில் என் முழு நாள் மிக வேகமாக ஓடியது. அனைத்து வேலைகளையும் முடித்து கொண்டு இரவில் உறங்க செல்லும் போதுதான் “என்னடா வாழ்க்கை இது?” என்று மிகவும் சலித்துக் கொள்வேன். வாழ்க்கை பயணத்தின் ஒவ்வொரு நாளும் எனக்கு மிஞ்சுவது ஏமாற்றம் மட்டுமே. அன்றைய நாள் தினம் இரவிலும் அன்றைய நினைவுகளை அசைபோட்டுக் கொள்வேன் என்றும் ஒரு புதிய விடியலை தேடிய கற்பனைகளுடன் நித்திரைகளில் நான்.
மனோஜ் ப