இந்த உலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் அடிப்படையாக அமைவது நீர். நீரின்றி இந்த உலகம் கண்டிப்பாக இல்லை என்றே சொல்லலாம். அப்படிப்பட்ட இந்த நீரை நமக்கு பூமியில் கொன்டு வந்து சேர்த்து தனது கருணையினால் ஜீவராசிகளின் வாழ்வாதாரம் செழிக்க செய்வதே இந்த மழையின் வேலை. அப்படிப்பட்ட இயற்கை அன்னையாய் விளங்கும் மழைத்துளி பற்றிய கவிதைகளை எனது கற்பனையில் பட்டவாறு இங்கு பதிவிட்டு உள்ளேன். அனைவர்க்கும் கட்டாயம் இந்த தமிழ் மழை கவிதைகள் பிடிக்கும் என்று நான் தீர்மானமாக நம்புகிறேன். மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம் எனது மழை பதிவில் நனையவிருக்கும் எனது வாசகர்களுக்கு மிக்க நன்றி.
மகிழ்ச்சி தரும் இயற்கை அன்னையின் தமிழ் மழை கவிதைகள்
அடடா..! காரணம் தெரியாமல் பெய்யான பெய்யும் இந்த மழைக்கு பூமியின் மீது மோகமா? இல்லை கோபமா?
சப்தமின்றி தனிமையில் ஜன்னலின் ஓரமாய் தூறல்களின் உரசலோடு இரு கைகளையும் மழை நீரால் அள்ளியவாறு காதுகளில் தாலாட்டும் மழையின் ஒளியை கண்ணொளியில் கண்டுகளிப்பதில் என்னே ஒரு ஆனந்தம்…!
நம் உடலுக்குத்தான் வயது ஒரு தடையே தவிர நம் மனதுக்கு இல்லையே? ஆகையால் வயது இருந்தால் மழையில் நனைவோம். முதுமை அடைந்தால் மழையால் மகிழ்வோம்.
யாருக்குத்தான் இல்லாமல் இல்லை சோகம்? அதை நினைத்தே நாள்பொழுதும் வாடுகிறோமே நாமும்… கவலைகளை தூர தூக்கி போடுவோமே இனியும்… ஆனந்தமாய் மழையை அனுபவிப்போமே ஒவ்வொரு கணமும்…
மனதில் சலனங்கள் பல இருந்தாலும் இனிய சாரலோடு மழையில் நனையும் போது சங்கடங்கள் கூட சந்தோஷமாகி விடுகிறது.
மனதை தொடும் ஹைக்கூ தமிழ் மழையின் கவிதைகள்
இந்த மழைக்கு எப்போதுமே விளையாட்டுத்தனம் தான் போலும் …! இப்படி விண்ணுக்கும் மண்ணுக்கும் தினமும் இடம் பெயர்ந்து விளையாடி கொண்டே இருக்கிறதே…!
சில சமயம் மழைக்கும் கோபம் வருகிறதே…! விளைவில் சிறு துளிகளில் ஆரம்பித்து பெரு வெள்ளத்தில் அல்லவா கொண்டு போய் முடிகிறது…
விண்ணாளும் அரசன் இந்த மண்ணாலும் பூமாதேவிக்கு அளிக்கும் பரிசு மாலையோ இந்த மழை?
சூரியனுக்கும் விதிமுறை உண்டு அந்த சந்திரனுக்கும் வரையறை உண்டு ஆனால் ஏனோ இந்த வான் மழைக்கு மட்டும் இயற்கையின் நியதியில் எந்தவொரு வரைமுறையும் இல்லாத காலநிலை அல்லாத தேவன் வகுத்த ஒரு தனி விதி விலக்கு.
வானத்தின் தோரணையில் ஏனோ ஒரு மாறுதல் தான் போல இன்று… கருமேகங்கள் புடை சூழ விண்ணுலகை இருளில் மூழ்க செய்யும் முயற்சியோ இது? இதோ ஒளியும் ஒலியும் இணைந்து பூமியில் மீண்டும் பாரத யுத்தம் நடப்பதை போன்ற ஒரு உணர்வை தந்து பிரமிப்பூட்டுகின்றதே. பிறகு என்ன சற்று நேரம் தான் தாமதம் என் மேனியில் பட்டு மண்ணில் விழுந்த இரு துளி நீர்த்துளிகள் சிதறுவதற்குள்ளே பட படவென. பட்டாசு போல அங்கும் இங்குமாக குறுக்கும் நெடுக்குமாக வெடித்து சிதறி என்னை முழுவதும் அதன்பால் சரணடைய செய்த இந்த மழைத்துளிகளின் கொஞ்சல்களில் நான் கொஞ்ச நேரம் மூழ்கி திளைத்து மனம் குளிர்ந்து அகம் மகிழ்ந்து தான் போனேன்.
சில சமயம் சொல்ல முடியாத மனதில் புதைந்த சோகங்களை மழை மனதில் மறைத்து வைத்து கொண்டு பூமியிடம் சொல்லி நினைத்து நினைத்து இப்படி அழுகிறதே…?
புத்தம் புதிய இயற்கை மழை கவிதை வரிகள்
காற்றின் இசையில் மயங்கி நடனமாடும் மரங்கள். சுட்டெரிக்கும் ஆதவனையும் தன்னிலை மறக்க வைத்து சற்று நேரம் அதன் பிடியில் மறைத்து வைக்கும் மேகங்கள். பூக்களின் நறுமணத்தை விட அதிகம் வாசம் தரும் பூமியின் மண் வாசனை. விண்ணிலிருந்து அதிவேக சப்தமாய் ஒழிக்கும் இடியும் அதன் கூடவே நம்மை நிசப்தமாக்கும் மின்னலும் ஒரு சேர தோன்றி அண்ட சராசரங்களையும் தனது துளிகளால் கரைத்து அளவளாவி மகிழும் மழை என்னை பொறுத்தமட்டில் என்றுமே ஒரு சொல்லப்படாத அதிசயமே.
அளவோடு பெய்தால் தான் மழையையும் போற்றுகிறோம் அடைமழையாய் தொடர்ந்து பெய்யும்போது மழையையும் தூற்றத்தான் செய்கிறோம்.
பூமியெங்கும் செழிப்பாய் விளங்க குளம் குட்டைகளில் நீர் பெருக்கெடுத்து ஓட ஏழைவிவசாயிகளின் வாழ்வாதாரம் தழைத்தோங்க ஓரறிவு முதல் ஏழறிவு உள்ள அனைத்து உரிரினங்களுக்கும் என்றுமே துணையாய் நீ வேண்டுமே.
என்னை இதமாய் வருடி அங்கம் முழுவதும் சில்லென்ற புயல் காற்றின் தாக்கத்தால் நான் கடும் குளிரால் உறைந்து கிடந்தாலும் கூட மனம் மட்டும் மழையே நீ வர வேண்டுமே இன்று என்று என்னுள் தவித்து கிடக்கிறதே…!
வருணன் சேமித்து வைத்த கவிதை துளிகள் எப்படியோ நழுவி இன்று பூமிக்கு வந்து கேட்பாரின்றி கண்ணீரை முழுவதுமாக நனைத்து இப்படி கரைந்து விட்டதே…!
எங்கிருந்தோ வந்து உன் இனிய பாச பிணைப்பில் என்னை நனைக்க/நினைக்க/திகைக்க வைத்தாய். இன்னுமே நான் ஆவலாகத்தானே உள்ளேன் உன்னோடு மீண்டும் ஐக்கியமாக சீக்கிரம் வந்துவிடு என் மழைக்காதலியே…நீ விட்டு சென்ற இடத்திலேயே காத்து கிடக்கிறேன் உன் காதலனாக…ஈரம் காய்வதற்குள் மீண்டும் வந்து என் ஸ்பரிசத்தை உன் அன்பால் அணைத்து விடு…