மழைப் பிழை.
மழையே நீ மழையாய் பெய்
பிழையாய் பெய்யாதே
அழகாய் பெய்
அழிவாய் பெய்யாதே
மெல்லமாய் பெய்
வெள்ளமாய் பெய்யாதே
வேணும் என்றால் மட்டும் பெய்
இப்படி
வேணுமென்றே பெய்யாதே.
மண் நனைய பெய்
எம் கண் நனைய பெய்யாதே
மேட்டுக் காடுகள் விளைய பெய்
வீட்டு முகடுகள் வளைய பெய்யாதே
முற்றத்து மலர்கள் விரிய பெய்
மொட்டுகள் ஒடிந்து சரிய பெய்யாதே
ஆறுகள் குளங்கள் நிறைய பெய்
அழகிய வீதிகள் மறைய பெய்யாதே
தாராளமாய் பெய்
ஏராளமாய் பெய்யாதே
அளவு கடந்து போவதால்
வளவு நிறைந்து மேவுது
அத்திவாரம் தாண்டி வந்து
அறைகள் ஈரம் ஆகுது
வேணும் என்றால் மட்டும் பெய்
இப்படி
வேணுமென்றே பெய்யாதே
பெய்யெனப் பெய்
பேய் எனப் பெய்யாதே
மழையே நீ
மழையாய் பெய்
பிழையாய் பெய்யாதே.